Kurunathaswami Kovil - Kankesanturai -2026
குருநாதசுவாமியும்
வரதபண்டிதரும்
குரு அரவிந்தன்
இலங்கையின் வடபகுதியில் உள்ள காங்கேசந்துறை
கண்ணியவளையில் குடிகொண்டிருக்கும் குருநாதசுவாமி பற்றி கிள்ளைவிடு தூது என்ற
தூதுப்பிரபந்தம் பாடியவர்தான் சுன்னாகத்தில் வாழ்ந்த வரதபண்டிதர். தமிழ்
இலக்கியத்தில் இத்தகைய தூதுப் பிரபந்தங்களின் சிறப்பு என்னவென்றால் சமகால
நிகழ்வுகளை அப்படியே எடுத்துச் சொல்வதாகும். 1656 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒல்லாந்தரின் ஆட்சிக்
காலத்தில் வாழ்ந்தவர் என்பதால், அக்கால நிகழ்வுகளை அப்படியே பதிவு
செய்திருக்கின்றார். 1505
ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த போத்துக்கேயர் போலல்லாமல், ஒல்லாந்தர்
காலத்தில் ஓரளவு வழிபாட்டுச் சுதந்திரம் இலங்கையில் இருந்தது.
கனடாவில் இருந்து வெளிவரும் தமிழர் தகவல் இதழில் 2018
ஆம் ஆண்டு வரதபண்டிதர் பற்றிக் கட்டுரை ஒன்று எழுதி இருந்தேன். காரணம் எங்கள்
குலதெய்வமான குருநாதசுவாமி பற்றிக் ‘கிள்ளைவிடு
தூது’ என்ற தூதுப்பிரபந்தம்
பாடியவர் என்பதால் அதில் அதிக கவனம் செலுத்தியிருந்தேன். வரதபண்டிதரின்
பிள்ளையார்கதை மட்டுமல்ல,
இன்னுமொரு
நூலான கிள்ளைவிடு தூது காங்கேசந்துறை கண்ணியவளையில் கோயில் கொண்டிருக்கும்
குருநாதசுவாமி மீது பாடப்பெற்றது. இன்று காங்கேசந்துறை விமானம், கப்பல், தொடர்வண்டி, மற்றும்
வண்டிப் போக்குவரத்து போன்ற நான்குவகைப் போக்குவரத்தையும் கொண்ட முக்கிய நகரமாக
இலங்கையின் வடபகுதியில் இருக்கின்றது.
நான் பிறந்து வளர்ந்த இந்த இடத்தின் பெயர் திரிந்து, இப்பொழுது ‘இறங்கண்யவளை’ என்று அழைக்கப்படுகின்றது.
கசாத்துறை என்று அழைக்கப் பெற்ற இங்குள்ள பழம்பெரும் இறங்கு துறையில் காங்கேயன்
என்ற மாவை முருகக்கடவுளின் விக்கிரகம் சோழ இளவரசி மாருதப்புரவீக வல்லியால்
வரவழைக்கப்பட்டு இறங்கியதால், இந்த ஊர் காங்கேசந்துறை என்ற பெயரைப் பெற்றது.
கோயிற்கடவை முருகனாலயம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலாயிற்று. (மா-விட்ட-புரம்)
மா என்றால் குதிரை என்று பொருள் படும். 'சோழ
இளவரசி மாருதப்புரவீகவல்லி' என்ற எனது வரலாற்றுப் புதினத்தில் இதைப்பற்றிக்
குறிப்பிட்டிருந்தேன். அறிவியல் சாரந்து அது குதிரை முகமல்ல, குதிரைமுக நோய் என்பதையும் ஆதாரங்களுடன் தெளிவு
படுத்தியிருந்தேன். இலங்கையில் இருந்து வெளிவரும் பிரால இதழான வீரகேசரியில் தொடராக
45 அத்தியாயங்களாக இத் தொடர் வெளிவந்து பலரின் பாராட்டையும் பெற்றது.
மேற்கே கீரிமலை, வடக்கே காங்கேசந்துறை, தெற்கே மாவிட்டபுரம் அடங்கிய
முக்கோணப்பகுதியை கோயிற்கடவை என்ற பழைய பெயரில்
இப்பொழுதும் அழைக்கின்றார்கள். கோயிற்கடவையில் உள்ள குருநாதசுவாமி என்று
அழைக்கப்படுகின்ற முருகனைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட இலக்கியமாக இந்த கிள்ளைவிடு
தூது அமைந்திருக்கின்றது. காங்கேசந்துறையில் மரங்கள் சோலையாக இருப்பதால் கிளிகளும்
குயில்களும் அதிகமாக உண்டு. அதனால்தான் காயைப் பறித்துக் கனிபழமாய்க் காண்பித்தோன்
தாயிற்சிறந்த தயவாளன் இறங்கண்ணியவளை அழகன் முருகனுக்குக் கிளியைத் தூது
அனுப்புகிறாள் தலைவி.
‘திருவள்ளுவருரைத்த செய்யுட்
பயனைப்
பெருகநினைந் தச்சமறப் பேசி முருகுமலர்ச்
சோலைப் பசுங்கிளியே சொல்லுங் குருநாதர்
மாலைதனை நீவாங்கி வா.’
குருநாதனுக்குக் கண்ணியவளைப் பெண்னொருத்தி கிளியைத்
தூது அனுப்புவதாகக் கிள்ளைவிடு தூது மூலம் சொல்கிறார் வரதபண்டிதர். இங்கே
இதைப்பற்றி முக்கியமாகக் குறிப்பிடுவதற்குக் காரணம் குருநாதர்தான் எங்கள்
குலதெய்வமாக இருக்கிறார். குருநாதசுவாமி குடியிருந்த மிகப் பழமை வாய்ந்த இந்தக்
கோயிலின் ரோகினி மடத்தில் யுத்தகாலத்தில் இந்திய இராணுவம் தங்கியிருந்தபோது அதில்
சில இந்துக்களும் இருந்ததால் அவர்களும் கோயிலில் வழிபாடு செய்தார்கள். அதன் பின்
வந்து தங்கியிருந்த இலங்கை இராணுவத்தினர் 2016 ஆம் ஆண்டு என்று நினைகின்றேன், அந்த
இடத்தை விட்டு விலகும்போது முற்றாக இடித்து அழித்து தரைமட்டமாக்கி விட்டுத்தான்
சென்றார்கள்.
இதற்கு முக்கிய காரணம் அடையாளங்களை அழிப்பதன் மூலம்
தமிழர்கள் அங்கு பாரம்பரையாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அடையாளங்களை இல்லாமற்
செய்வதேயாகும். வரதபண்டிதரால் கிள்ளைவிடுதூது பிரபந்தத்தில் பாடப்பட்ட
குருநாதசுவாமி கோயிலும், அருகே
இருந்த மிகப்பழமை வாய்ந்த நாச்சிமார் கோயிலும் அழிக்கப்பட்ட நிiயிலேயே
இருந்தன. இவை அங்கு பரம்பரையாக வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றைக் குறித்து நிற்பதால், எப்படியாவது
மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும், அந்த மண்ணில் தமிழர் பாரம்பரியமாக வாழ்ந்ததன்
அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதே, இராணுவத்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பலரின்
விருப்பமாக இருந்தது.
மெய்நிகர் வழியாக நடந்த ஒரு கலந்துரையாடலின் போது, வரதபண்டிதரின்
கண்ணியவளை குருநாதசுவாமி மேல் பாடப்பெற்ற கிள்ளைவிடு தூது என்ற நூலுக்கு யாழ்.
பல்கலைக்கழக கலாநிதி க. ரகுபரன் அவர்கள் எழுதியிருந்த உரை பற்றி கலந்து
உரையாடப்பட்டது. பலர் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் முன்நாள் பேராசிரியர்
சண்முகதாஸ், கலாநிதி
திருமதி சண்முகதாஸ், பேராசிரியர்
மௌனகுரு, பேராதனை
பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரசாந்தன், ஊவா பல்கலைக்கழக பேராசிரியர் மார்க்கண்டன் ரூபவதனன்
ஆகியோரது, இந்த
கிள்ளைவிடு தூது சார்ந்த கருத்துக்களை அப்போது அறிய முடிந்தது. இந்தக் கிள்ளைவிடு
தூதுப் பிரபந்தம் ‘சமகால சமூக வரலாற்றைக் குறிப்பிடும் உன்னதமான இலக்கியமாக’
இருக்கிறது என்ற கருத்து அவர்களால் முன் வைக்கப்பட்டது. ஏட்டுப்பிரதியாக இருந்த
கிள்ளை விடு தூது என்ற வரதபண்டிதரின் இந்த நூல் மறுபதிப்பாக 1921
ஆம் ஆண்டு கொக்குவில் சோதிடப் பிரகாச யந்திரசாலை என்ற பதிப்பகத்தால்
வெளியிடப்பட்டது. இந்நூலினை உடுவில் இரத்தினேஸ்வரஐயர் பதிப்பித்திருக்கிறார்கள்.
குமாரசுவாமிப்புலவரும், நவாலியூர்
சோமசுந்தரப்புலவரும் இப்பதிப்பிற்கு சிறப்புப்பாயிரம் சொல்லியிருக்கிறார்கள்.
இலங்கை மண்ணில் சைவமும் தமிழும் வாழ்வதற்கு வழிகாட்டிய வரதபண்டிதர் 1716
ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
சுவாமி விவேகானந்தர் உருவ வழிபாடு பற்றிக் குறிப்பிடும் போது. அது ஏன் தேவை என்பதைத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கின்றார். ஒருவருடைய மனம் பக்தி மார்க்கத்தில் பண்படையும் வரை வழிபடுவதற்கு உருவம் தேவை என்பதையும், மனம் பக்குவப் பட்டுவிட்டால் அதன்பின் விட்டுவிடலாம் என்பதையும் குறிப்பிட்டிருக்கின்றார். உதாரணமாக நாங்கள் ஒரு வீட்டைக் கட்டும் போது சாரமரங்களைப் பாவிக்கின்றோம். வீடு கட்டி முடிப்பதுதான் எங்கள் நோக்கம் என்பதால், முடிந்தபின் அவற்றை நீக்கி விடுகின்றோம். அதேபோலத்தான் முக்தி என்ற வீட்டைக் கட்டுவதற்கு தொடக்கத்தில் உருவ வழிபாடு வேண்டும், அதன் பின் தவிர்த்து விடலாம் என்பதையே அவர் குறிப்பிடுகின்றார். நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்று தமிழில் குறிப்பிடுவார்கள், கல்லில் செதுக்கப்பட்ட ஒரு நாயின் உருவத்தை நாங்கள் நாய் என்று பார்த்தால் நாயாகத்தான் தெரியும், வெறும் கல்தானே என்று பார்த்தால் அது கல்லாகத்தான் தெரியும், எனவே எந்த நோக்கத்தோடு பார்க்கின்றோம் என்பது ஒருவரின் பார்வையைப் பொறுத்தது.
இதையே விபுலானந்த சுவாமிகள் உள்ளக் கமலமடி உத்தமனார்
வேண்டுவது என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார். அந்தப் பாடலையும் இங்கே
தருகின்றேன்.
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியினைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை தெய்வீக சின்னமாகக்
கருதப்படுகின்றன. கருவறையில் உள்ள மூலவரை மூர்த்தி என்பர். தலம் என்பது கோயில்
கட்டுமுன்பே சுவாமி எழுந்தருளிய மரம் என்பதால் தலவிருட்சம் என்பர். தீர்த்தம்
என்பது நீராடும் இடமாகும். இங்கே குருநாதர் என்று அழைக்கப்படும் முருகன்
கருவறையில் மூர்த்தியாக இருக்கின்றார். தென் மேற்கு மூலையில் உள்ள கொன்றை மரம்
தலவிருட்சமாகவும், தெற்கு
வீதிக்கு அருகே உள்ள பூங்காவில் உள்ள அழகிய தாமரைத் தடாகம் தீர்த்மாகவும் எமது
காலத்தில், அதாவது
யுத்தத்திற்குமுன் இருந்தன. இராணுவத்தின் செல் மற்றும் குண்டு வீச்சால் இவை
இப்போது அழிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்ப இடமுண்டு. தெற்கு
வீதியில் உள்ள கிணற்றுக்கு நேரே தெற்கே உள்ள காணியில் பெரிதொரு தாமரைத் தடாகம்
இருந்தது.
குரு என்றால் ஈசுவரன், நாதன் என்றால் ஈசுவரனின் மகன்
முருகன். அதனால் குருநாதசுவாமி என்று பெயர் சூட்டியதாகவும் சொல்லப்படுகின்றது.
ஆனால் இங்கே வரதபண்டிதரின் கூற்றுப்படி வெப்பத்தைத் தணிக்கும் கடவுள் முருகன்
என்பதால் அந்தப் பெயர் வந்ததாகக் குறிப்பிடுகின்றார். காரணம் கண்ணகியின் கதையோடு
தொடர்பு படுத்தி இருப்பதேயாகும். ஒரு காலத்தில் அம்மை நோயால் ஆயிரக்கணக்கானோர்
மரணித்ததாகவும், குருநாதரை
வணங்கி அதிலிருந்து ஏனையோர் மீண்டதாகவும் ஐதீகக் கதைகள் உண்டு. இதைவிட
குருநாதரிடம் கால் நடைகளுக்காக நேர்த்தி வைக்கும் வழக்கம் இப்பொழுதும்
இருக்கின்றது. எங்கள் காலத்தில் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் நேர்த்தி
வைத்தவர்கள் வண்டிமாடு கட்டி வந்து குருநாதசுவாமி கோயிலில் நாகவழிபாட்டின்
அடையாளமாக உள்ள நாகதம்பிரானுக்குப் பொங்கிப் படைப்பதுண்டு.
கோயிலைப் பற்றிப் பாடும் போது கோயிலுக்கு அருகே உள்ள
சூழலையும் நாயன்மார்கள் சில பாடல்களில் குறிப்பிட்டிருந்தார்கள். குறிப்பாக
திருநாவுக்கரசர்,
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
என்று சூழலை வர்ணித்தது போல, வரத
பண்டிதரும் கிள்ளைவிடு தூது என்ற பிரபந்தத்தில் குருநாதசுவாமி கோயில் சூழலை
வர்ணித்திருக்கின்றார். நேரம் கிடைத்தால், இணையத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம், விரும்பினால்
நீங்கள் இதற்கு உரையும் எழுதலாம்.
வரலாற்றை எழுதிவைக்க வேண்டும் என்பதால், எங்களுடைய
மாணவப் பருவத்தில் கோயில் சார்ந்த சில முக்கிய பிரச்சனைகளை நாங்கள் எதிர் கொள்ள
வேண்டி வந்தது. குருவீதியில் இருந்த குருவிளையாட்டுக் கழகத்தில் சுற்றாடலில் உள்ள
இளையதலைமுறையினர் எல்லாம் அங்கத்தவராக இருந்தார்கள். அவ்வப்போது நாங்கள், விளையாட்டைத்
தவிர தன்னாரவத் தொண்டர்களாக ஊரில் பல தொண்டுகளில் ஈடுபட்டோம். ஒரு முறை
குருநாதசுவாமி கோயில் மேற்கு வீதிப்பக்கம் இருந்த சுற்றுமதில் உடைந்து சரிந்து
போயிருந்தது. எங்களுடன் சேர்ந்து, ஊரிலே கட்டுமான பணிபுரியும் ஒருவரின் மகன் இந்தத்
திருத்த வேலைகளை முன்னின்று செய்தார். ஆனால் திருவிழாவின் போது அவரை உள்ளே விடச்
சில முதியோர் மறுத்து விட்டார்கள்.
இந்த விடயம் இளையோரை அவமதிப்பது போல இருந்ததால், நாங்கள்
கோயிலின் சுற்றாடலில் குடியிருந்த புரட்சிகர சிந்தனை கொண்ட அதிபர் பொ.
கனகசபாபதி அவர்களுடனும், எழுத்தாளர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களுடனும்
இது பற்றி மறுநாள் உரையாடினோம். ஊர்ப் பெரியவர்கள் என்று சொல்லும்போது எமது
பெற்றோர்களை எதிர்க்க முடியாது என்பதால், வள்ளிநாயகி இராமலிங்கம் எங்களுக்கு ஒரு ஆலோசனை
தந்தார், அது
என்னவென்றால் அமைதியான முறையில் இதைச் சாதிக்க வேண்டுமானால், வெளிவீதியில்
சுவாமி தூக்குவதைப் பகிஸ்கரிக்கச் சொன்னார். அதன் படியே நாங்கள் நடந்தோம். அப்போது
ஆலய தர்மகத்தாவாக கோகுலனின் பாட்டா சங்கரப்பிள்ளை இருந்தார். அவர் சுவாமியைத்
தூக்கும்படியும், மறுநாள்
ஒன்றுகூடிப் பேசித் தீர்க்கலாம் என்றும் குறிப்பிட்டார். அதன்படி மறுநாள்
ஊர்ப்பெரியவர்ளுடன் பேசினோம். கோயில் தர்மகர்த்தா திரு. சங்கரப்பிள்ளை அவர்களுடன்
திருவிழா உபயகாரர்களில் சிலரான மு. அ. சின்னத்தம்பி, மு. அ. வல்லிபுரம், குருசாமி
மாமா ஆகியோரும் வந்திருந்தார்கள். ‘உங்கள் நல்ல நோக்கம் புரிகிறது, ஆனால்
திடீரென உடனே எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த முடியாது, அதனால்
நந்திவரையும் அவர்களை விடலாம்’ என்று சொன்னார்கள். மறுநாள் எல்லைக் கோடு போல, மஞ்சள்
நாடாவையும் நந்திக்கு அப்பால் கட்டியிருந்தார்கள்.
மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. நண்பர்கள் குழம்பிப்
போனார்கள். நான் அப்போது மகாஜனாவில் படித்துக் கொண்டிருந்தேன். நான் என்ன
சொன்னாலும் நண்பர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ‘இது
கட்டாயம் தீர்க்கப்பட வேண்டிய விடயம் என்பதால், கிடைத்த உரிமையை மறுக்காமல் இப்போதைக்கு ஏற்றுக்
கொள்வது நல்லது என்ற கருத்தை முன்வைத்து அதற்கான காரணங்களையும் விளங்கப்
படுத்தினேன். கிடைக்கிற உரிமையை மறுத்தால், ஒன்றுமே கிடைக்காமல் போய்விடும் என்பதை எங்கள்
அனுபவத்தில் அறிந்திருந்ததால், நண்பர்கள் அப்போது அதை மறுக்காது ஏற்றுக் கொண்டதால், இன்று
வேறுபாடின்றி எல்லோரும் உள்ளே சென்று மூலவர்வரை வழிபடக் கூடியதாகக் காலம்
மாற்றிவிட்டது.
இதேபோல, மாம்பிராயில் உள்ள வைரவர் கோயிலில் நடந்த
வேள்வியையும், கோயிலின்
பெயரால் இதைச் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு நல்ல முறையில் எடுத்துச் சொல்லி
நிறுத்தி வைத்திருந்தோம். அதன்பின் விடுதலைப் போராளிகளும் எமக்கு ஆதரவாக அந்த
முடிவைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தனர். இளைஞர்களாக
இருந்த போது, நாங்கள்
எடுத்த இந்த இரண்டு முக்கிய முடிவுகளையும் எண்ணிப் பெருமைப் படுகின்றோம்.
கத்தியின்றி, ரத்தமின்றி
இந்தப் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட முக்கிய காரணமாக இருந்த நண்பர்களின் வீட்டுப்
பெயரான கண்ணன், நாதன், யோகன், கிச்சி, தர்மகத்தாவின்
மகன் தம்பா, சீலன், நேசன், சிறியண்ணா, தனபாலசிங்கம், அருள்முருகன்
மற்றும் சிலர் ஆகியோரைப் பற்றிப் புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதால் இதைக் குறிப்பிடுகின்றேன். இவர்களில் சிலர் இப்போது எங்களைவிட்டுப்
பிரிந்து இறைவனடி சேர்ந்து விட்டாலும், அவர்களின் சிந்தனைகளின் வெளிப்பாடு எம்மோடு
இருக்கின்றன.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புக் காரணமாகத்
தற்காலத்தில் கோயில்கள் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருப்பார்கள். ஒரு ஊருக்குக்
கல்வித் தலமும், வழிபாட்டுத்
தலமும் மிக அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காரணம், தமிழர்களான
எமது தொன்மையான வரலாற்றை,
தமிழர்கள்
அந்த இடங்களில் வாழ்ந்தார்கள் என்பதை நிரூபிப்பதற்கு எங்களிடம் ஆவணங்கள் இல்லாத
போது, இந்தப் புராதன கோயில்கள்தான்
முக்கிய ஆவணமாக இருப்பதை மறுக்கக்கூடாது. கதிர்காமம், முன்னேசுவரம், மற்றும்
அழிந்த நிலையில் இருக்கும் தொண்டீசுவரம் போன்றவை இதற்கு நல்ல உதாரணங்களாகும். தக்க
சமயத்தில் இராணுவத்தால் இடிக்கப்பட்ட குருநாதசுவாமி கோயிலில் இருந்த மூல
விக்கிரகங்களைக் கவனமாக எடுத்து பாதுகாத்து திரும்பக் கையளித்த மாவை பிரதம
குருக்கள் து.ச. இரத்தினசபாபதிக் குருக்கள் அவர்களுக்கு நன்றிகூறக்
கடமைப்பட்டிருக்கின்றோம். எமது இனத்தின் எதிர்கால நலன் கருதி, ஒரு
விடயத்தை வேண்டாம் என்று புறம் தள்ளுவதைவிட்டு, அறிவியல் சார்ந்து காலத்திற்கேற்பச் சிந்தித்து, அதை
நடைமுறைப் படுத்துவது சிறப்பானது என்றே நினைக்கின்றேன். ஓம் குருநாதா!
.......



Comments
Post a Comment