Story - Where should I look for that woman..? - 25-11-26

 



அந்தப் பெண்ணை எங்கே தேட..?

குரு அரவிந்தன்.

சின்ன மாமா ஊரிலே இருந்து வந்திருந்தார். எனது தங்கையின் திருமணத்தில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்ற அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்திருந்தேன். அவருடைய குடும்பம் ஊரிலே இருந்தாலும் கலியாணத்தைக் காரணம் காட்டி அழைத்ததால் அவரை மட்டும்தான் கனடா அழைக்க முடிந்தது. ஆறுமாதம் இங்கே தங்க விசா கொடுத்திருந்தார்கள். அதுவரையும் அவர் இங்கே இருக்கப் போவதில்லை, கட்டாயம் கலியாணம் முடிஞ்சதும் திரும்பிப் போய்விடுவார்.

எங்கள் சமூக நடைமுறைக்கு ஏற்ப தங்கை திருமணம் செய்தபின்தான் அண்ணன் திருமணம் செய்யலாம் என்ற நடைமுறையில் அம்மாவும் கொஞ்சம் கவனமாக இருந்ததால், எனது திருமணத்தைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. உறவினர்கள் வரும் போதெல்லாம், மறைமுகமாக அம்மா அவ்வப்போது ‘அவனுக்கு என்ன அவசரம் தங்கச்சியைக் கட்டிக் கொடுத்திட்டுத் தனக்கு விரும்பினவளை வேணுமெண்டால் கட்டட்டும்’ என்று சொல்வது என் காதுகளில் விழுந்து கொண்டுதான் இருக்கும்.

கனடா வாழ்க்கை உங்களுக்குத் தெரிந்ததுதானே, அதனால் நானும் அம்மாவின் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்து திருமணத்திற்கு அவசரப்படவில்லை. ஊரிலே உள்ளது போல பேசி ஒழுங்கு செய்யும் திருமணங்கள் இங்கே பெரிதாக எடுபடுவதில்லை. ஏதாவது குடும்பத் தகராறு என்றால் இளைய தலைமுறையினர் பெற்றோரையே சாட்டிவிடுவார்கள். என்னுடைய கூட்டாளிகளில் அதிகமானவர்கள் இன்னும் திருமணம் பற்றி யோசிக்கவும்

இல்லை. அதனால் நானும் அதைப் பெரிதாக எடுக்கவில்லை.

கனடா நாட்டிற்கு முதன் முதலாக யாராவது வந்தால் பொதுவாக நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்காமல் போவதில்லை. உலக அதிசயங்களில் ஒன்று என்பதால் அதைப் பார்ப்பதற்காகவே பலரும் வருகிறார்கள். கோடைகாலத்தில் பெரும் இரைச்சலுடன் நீர் கொட்டுவதும், பனிக்காலத்தில் ஒருபகுதி நீர் உறைந்து போயிருப்பதும் அழகான காட்சியாகும். இங்கே மூன்று நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. இரண்டு அமெரிக்க பகுதியில் இருக்கிறது மற்றது சற்றுத்தள்ளி கனடிய பகுதியில் இருக்கிறது. கனடிய நீர்வீழ்ச்சிதான் பெரியதும் அழகானதுமாகும்.

சின்ன மாமாவும் ஆசைப்பட்டதால் அவரை நாயாகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்றேன். முன் இருக்கையில் இருக்கைப் பட்டியைப் போட்டு வசதியாக உட்கார்திருந்தார். நான் கூகுல் வரைபடத்தைப் போட்டு செல்ல வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டிருந்தேன்.

வழமைபோல அவளது குரல் கேட்டது. வீட்டை விட்டு வெளிக்கிட்டதும். வீதியில் ‘வலது பக்கம் திரும்பு, இடது பக்கம் திரும்பு’ என்று செல்லிக் கொண்டே வந்தாள்.

மாமா இதையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

திடீரென ‘முன்னால் சிவப்பு விளக்குக் கமெரா இருக்கு கவனம்’ என்று எச்சரித்தாள்.

மஞ்சள் விளக்கு எரிந்தாலும் அவள் சொன்னதால் நான் அவசரப்படாமல் பாதையைக் கடக்காமல் வண்டியை நிறுத்தி வைத்திருந்தேன்.

‘நல்ல குரலாக இருக்கு, தெரிஞ்ச பிள்ளையே?’ என்றார் சின்னமாமா.

‘ஓம் மாமா, தெரிஞ்ச பிள்ளைதான். எங்கேயாவது தெரியாத இடங்களுக்குப் போறதென்டால் இந்தப் பிள்ளையைக் கேட்டால் வழிகாட்ட உதவி செய்யும். கூகுள் சட்டலைட்டுக்கால பார்த்து எல்லாம் சொல்லும். இந்தப் பிள்ளைக்கு இங்கே உள்ள அனேகமான இடங்கள் எல்லாம் பழக்கம்.’ என்றேன்.

நான் கனடாவில நல்ல விலாசமாய் இருக்கிறேன் என்று மாமாவிற்குக் காட்டுவதற்காக சும்மா அடித்துவிட்டேன். அதுமட்டுமல்ல, மாமாவிற்கு கூகுல் பற்றி எல்லாம் சொன்னாலும் விளங்குமோ தெரியாது.

‘அப்பிடியே, இந்தக் காலத்தில் அதுவும் வெளிநாட்டில இப்படி ஒரு பிள்ளை உதவி செய்யிறது எண்டால் நினைச்சுப் பார்க்க முடியுமே?’

‘ஓம் மாமா இங்கேயும் இது போல சில நல்ல வசதிகள் இருக்கு’

‘குரலைப்பார்க்க கனடா பிள்ளை போல இருக்கு, வெள்ளைப் பிள்ளையே?’

‘தெரியாதுமாமா, நான் நேர பார்க்கவில்லை, இப்படித்தான் பழக்கம்’

நெடுஞ்சாலையில் நயாகரா நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம்.

‘சற்றுத் தூரத்தில் பாதை ஓரத்தில் வேறு ஒரு வண்டி தரித்து நிற்கிறது வேகத்தைக் குறையுங்கள்’ என்று எங்கள் உரையாடலுக்கு நடுவில் அவள் சொன்னாள்.

அவள் சொன்னது போலவே நெடுஞ்சாலையோரத்தில் அவசரகால விளக்கைப் போட்டபடி ஒரு கறுப்பு வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதை மெதுவாகக் கடந்து சென்றோம்.

‘நல்ல காலம், இந்தப் பிள்ளை சொல்லாட்டி வந்த வேகத்திற்கு மோதியிருப்பம்’ என்றார் மாமா.

‘சில நேரங்களில இப்படித்தான், பதட்டத்தில் எங்கே நிற்பாட்டுவது என்று தெரியாமல் வண்டியை இப்படியும் நிற்பாட்டியிருப்பார்கள், நாங்கள்தான் கவனமாக இருக்க வேணும்.’

‘இவ்வளவு தூரம் வண்டியோட்ட உனக்குக் களைப்பாக இல்லையே?’ என்று கேட்டார் மாமா.

‘இப்பதானே வண்டியோட்டி இல்லாமல் வண்டிகள் வந்து விட்டன. கொஞ்ச நாட்களில் இங்கேயும் பாவனைக்கு வந்துவிடும்’ என்று சொன்னேன்.

‘வண்டியோட்டி இல்லாமல் வண்டியா? எப்படி, வீதியில போனால் மோதிக் கொள்ள மாட்டுதா?’

‘இல்லை மாமா, எல்லாம் செயற்கைத் தொழில் நுட்பத்தின் உதவியுடன் நடக்கின்றன. நான் அமெரிக்கா போனபோது, லொஸ்வேகஸிலும், சான்பிரான்சிஸ்கோவிலும் வண்டியோட்டி இல்லாத வண்டிகளில பயணித்திருக்கிறன்’ என்றேன்.

‘பயமில்லையா, கலிகாலம் எல்லாம் மாறிக் கொண்டே போகுது’ என்று சலித்துக் கொண்டார் மாமா.

‘இல்லை மாமா, எல்லா வண்டிகளும் சற்றலைட் வழிகாட்டலின் உதவியோட பயணிக்கின்றன. தேவை ஏற்படின் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் உதவி செய்வார்கள்.’

நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறி ஸ்ரான்லி  அவென்யூவில் வண்டியைத் திருப்பிய போது. ‘பொலீஸ் வண்டி சற்றுத் தூரத்தில் நிற்கிறது’ என்று எச்சரிகை செய்தாள். வரைபடத்திலும் அது வட்டம் வட்டமாகக் காட்டியது.

மாமா நயாகரா நீர்வீழ்ச்சியை இரசித்துப் பார்த்தார். அவருக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது.

‘இந்த நீர்வீழ்ச்சி 187 அடி உயரமும் 2592 அடி அகலமும் கொண்டது. இந்தத் தண்ணீர் லேக் எரியில் இருந்து லேக் ஒன்ராறியோவிக்கு வந்து, அட்லாண்டிக் கடலை நோக்கிப் போகிறது. இது வினாடிக்கு 225,000 கன அடி தண்ணீரைக் கொட்டுகிறது. இதிலிருந்து மின்சாரமும் உற்பத்தி செய்கிறார்கள்.’ என்று மாமாவிற்கு விளக்கமாகச் சொன்னேன்.

நயாகரா நீர்வீழ்ச்சி, சி.என் கோபுரம், துறைமுகம், லோங்ஐலண்ட், வழிபாட்டுத்தலங்கள் என்று சில இடங்களைப் பார்த்ததில் மாமா திருப்திப்பட்டுக் கொண்டார்.

திருமணம் முடிந்து இரண்டு வாரத்தில் மாமா ஊருக்குப் பறப்பட்டார். அவரை வழி அனுப்புவதற்காக நாங்கள் எல்லோரும் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தோம்.

பியர்சன் விமான நிலையத்தில் என்னைத் தனியே அழைத்து ‘நாங்கள் எல்லாம் எவ்வளவு காலத்திற்கு இருப்பமோ தெரியாது, அதனாலே சூட்டோட சூடாய் உன்ர கலியாணத்தையும் முடிச்சிட்டியென்றால் நாங்கள் கனடாவுக்கு ஒரு நடை வந்து போகலாம்’ என்றார்.

‘எனக்கென்று ஒருத்தி பிறக்காமலா இருப்பாள், தேடிப்பார்த்து எல்லாம் சரி என்றால் என்ர கலியாணத்திற்குக் கட்டாயம் உங்களை அழைப்பன், என்ர கலியாணத்திற்கு நீங்கள் இல்லாமலா மாமா?’ என்றேன்.

‘என்ன சொல்லுறாய், உனக்கு ஒரு சினேகிதியும் இல்லையா?’

‘சினேகிதிகள் இருக்கினம் மாமா, ஆனால் கலியாணம் செய்யிற அளவுக்கு ஒருத்தரும் இல்லை.’

‘வெள்ளைப் பிள்ளை எண்டதால தயங்கிறியோ? வேணுமெண்டால் நான் அம்மாவிட்ட இதைப்பற்றிக் கதைக்கட்டே’

‘என்ன சொல்லுறீங்கள் மாமா?’

‘அதுதான் அந்த கூகுள் பிள்ளை.’

‘இல்லை மாமா, அப்படி ஒன்றும் இல்லை மாமா!’ நான் அவசரமாக மறுத்தேன்.

ஒரு பொய் சொல்லித் தெரியாமல் மாமாவிடம் மாட்டிக் கொண்டேன், அது உண்மை என்று நிரூபிக்க இன்னுமொரு பொய் சொல்ல நான் தயாராக இல்லை.

எனக்கென்று ஒருத்தி எங்கேயாவது பிறக்காமலா இருப்பாள்?


.............................

…………

Comments

Popular posts from this blog

Kankesanturai- Malini Aravinthan - Nov 2025

இரவில் தெரியும் சூரியன்

காங்கேசந்துறை - KANKESANTURAI